செய்திகள்

கொருக்குப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Published On 2019-05-11 07:18 GMT   |   Update On 2019-05-11 07:18 GMT
கொருக்குப்பேட்டையில் போலீஸ் நிலையத்தில் சென்னையில் உறவினர்கள் யாரும் இல்லாததால் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்தப்பட்டது.
ராயபுரம்:

சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி என்ற பெண் போலீஸ் 2½ ஆண்டாக பணியாற்றி வருகிறார்.

இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. 2008-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பணியாற்றிய இவர் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கருத்தரித்த மகாலட்சுமி. வளைகாப்பு நிகழ்ச்சி தனக்கு நடத் தப்படுமா? என்ற கவலையில் இருந்துள்ளார். உறவினர்கள் யாரும் சென்னையில் இல்லாததால் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைக்க விரும்பவில்லை.

குழந்தை பிரசவத்துக்கு தாய் வீட்டிற்கு செல்லும் முன் நடத்தப்படும் வளைகாப்பு நடைபெறுமா என்ற மன உளச்சலில் சக பெண் போலீசாரிடம் கூறி வருத்தம் அடைந்தார்.

இதுபற்றி பெண் போலீசார் சக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மகாலட்சுமிக்கு எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பிரசவத்துக்கு செல்லும் முன் வளைகாப்பு நிகழ்ச்சி போலீஸ் நிலையத்திலேயே நடத்த தடபுடலான ஏற்பாடு செய்யப்பட்டது.

குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி, சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் மோகன் ஆகியோர் தலைமையில் சீமந்த விழாவை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமியையும் அவரது கணவரையும் அமர வைத்து மாலை அணிவித்து சம்பிரதாய முறைகளை செய்தனர்.

பூ, குங்குமம் வைத்து வளையல்கள் கைகளில் பூட்டப்பட்டு மகாலட்சுமியை மணப்பெண் போல ஜோடித்தனர். பெண் காவலர்கள் மட்டுமின்றி ஆண் காவலர்களும் நிலையத்தில் பணிபுரிந்த சக ஊழியர்கள் அனைவரும் சீர்வரிசை தட்டுகளுடன் 5 வகை சாதம் கலந்து நலங்கு வைத்து விமரிசையாக கொண்டாடினர்.

போலீசாரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறினர். பெண் காவலர் மகாலட்சுமியுடன் ஒவ்வொருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

பொதுவாக போலீஸ் நிலையத்தில் காதல் திருமணங்களும், காதல் ஜோடியை இணைத்து வைக்கும் சம்பவங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஒன்று சேர்ந்து வித்தியாசமாக தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்துவதை காட்டிலும் சிறப்பாக அமைந்திருந்தது.
Tags:    

Similar News