பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வேதாரண்யம் தொழிலாளி கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் சதீஷ்(வயது 30). இவர் கூலி வேலை செய்து வந்தார். சதீசின் மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
இதனால் சதீசின் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி சதீசின் வீட்டுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் ஒரு நாள் பக்கத்து வீட்டு பெண் வேலைக்காக சதீசின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சதீஷ், அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.
குளிர்பானத்தை குடித்ததும் அந்த பெண் மயங்கி விழுந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சதீஷ், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.