செய்திகள்

அரியலூர் அருகே கார்-வேன் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலி

Published On 2019-05-01 12:49 IST   |   Update On 2019-05-01 12:49:00 IST
அரியலூர் அருகே இன்று காலை கார் மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெயங்கொண்டம்:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பண்டாரவிளை கிராமத்தை சேர்ந்தவர் சவுர்ஜான் (வயது 38). மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் மற்றும் மலேசியாவில் அவருடன் வசித்து வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் விடுமுறையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக பண்டாரவிளைக்கு வந்திருந்தார்.

இன்று காலை சவுர்ஜான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு டெம்போ வேனில் புறப்பட்டார். மொத்தம் 16 பேர் சென்றனர். அரியலூர் மாவட்டம் அணைக்கரை அருகே உள்ள மெய்க்காவல்புத்தூர் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே ஒரு கார் தாறுமாறாக வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர் ஆசிக் அலிப் (39) உடனே காரை சாலையோரமாக நிறுத்தினார். இருப்பினும் தாறுமாறாக ஓடி வந்த கார், வேனின் முன்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேன் மற்றும் காரின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

காரில் வந்த 3 பேர் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பிணமானார்கள். வேனில் இருந்த சவுர்ஜான், ரியாஸ்கான் (18), அரிபின் (16), முகமது சபிக் (47), அஸ்மான்ஜான், ஜிமிதாபேகம் உள்பட 16 பேர் காயமடைந்தனர். இதில் முகமது சபிக் மலேசியாவை பூர்வீகமாக கொண்டவர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி மற்றும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 16 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் பெயர் விவரம் குறித்து விசாரணை நடத்திய போது, அவர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மூவளூர் பகுதியை சேர்ந்த குமார் மகன் நித்தியானந்தம் (22), மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியை சேர்ந்த ரகுபதி மகன் பிரபா, அதே பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சஞ்சய் என்பது தெரியவந்தது. இதில் நித்தியானந்தம் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு ஊர் திரும்பிய போது விபத்தில் சிக்கி 3 பேரும் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News