செய்திகள்
ஜீவசமாதி அடைய சாப்பிடாமல் விரதம் இருக்கும் பெண் துறவி சுப்ரமத் பிரபாவதி மாதாஜி

ஜீவசமாதி அடைய 4 நாட்களாக சாப்பிடாமல் விரதம் இருக்கும் பெண் துறவி

Published On 2019-04-30 04:48 GMT   |   Update On 2019-04-30 04:48 GMT
செஞ்சி அருகே ஜீவசமாதி அடைய பெண் துறவி இன்று 4-வது நாளாக சாப்பிடாமல் விரதமிருக்கிறார். அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாதாஜியிடம் ஆசி பெற்றும் வணங்கியும் செல்கின்றனர்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மேல் சித்தாமூர். இங்கு தமிழக ஜெயினர்களின் தலைமை பீடமான ஜினகஞ்சி ஜெயின் மடமும், ஆயிரம் ஆண்டு பழமையான மல்லிநாதர், பார்சுவநாதர் ஜெயின் கோவில்களும் உள்ளன.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு யாத்திரை வரும் ஜெயின் துறவிகள் இங்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து 2 ஜெயின் துறவிகள் தலைமையில் 9 பெண் துறவிகள் தமிழகம் வந்தனர்.

இவர்களில் ஹவாரி பகுதியை சேர்ந்த 65 வயது பெண் துறவி சுப்ரமத் பிரபாவதி மாதாஜி பொன்னூர்மலை, வாழப்பந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெயின் கோவில்களுக்கு சென்று தரிசித்தார்.

பின்னர் அவர் ஜெயின்மத கோட்பாட்டின்படி உண்ணா நோன்பு இருந்து ஜீவசமாதி அடைய முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து சுப்ரமத் பிரபாவதி மாதாஜி கடந்த 1½ மாதத்துக்கு முன்பு பெண் துறவிகளுடன் மேல் சித்தா மூர் மடத்துக்கு வந்தார். அன்று முதல் அவர் 1 வேளை உணவு மட்டும் சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முதல் உணவு மற்றும் தண்ணீர் இன்றி விரதம் இருந்து வருகிறார். இன்று 4-வது நாளாக அவர் விரதமிருக்கிறார். அவருடன் வந்த துறவிகள் அனைவரும் 24 மணி நேரமும் அருகில் இருந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். சுப்ரமத் பிரபாவதி மாதாஜி வடக்கு நோக்கி தலைவைத்து படுத்துள்ளார்.

ஜீவசமாதி அடைவதற்காக பெண் துறவி உணவு, தண்ணீர் இன்றி விரதம் இருக்கும் தகவல் அறிந்ததும் செஞ்சி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாதாஜியிடம் ஆசி பெற்றும் வணங்கியும் செல்கின்றனர்.

இவர் ஜீவசமாதி நிலையை எட்டியதும் கொப்பரை தேங்காய், சந்தனகட்டை, நெய், கற்பூர கட்டிகள் ஆகிவை மூலம் சிதைமூட்ட மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News