செய்திகள்

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உறவினர்கள் வீடுகளில் சோதனை - ரூ.25 லட்சம் சிக்கியது

Published On 2019-04-05 10:23 GMT   |   Update On 2019-04-05 10:23 GMT
தர்மபுரி எம்.பி. தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உறவினர்கள் வீடுகளில் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
தர்மபுரி:

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்து தகவல் கொடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நடந்த தீவிரமான வாகன சோதனையில் ரூ.250 கோடிக்கு பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பற்றிய தகவல்களை சிலர் தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியமாக சொல்லி விடுகிறார்கள். அதன்பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறார்கள்.

காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் இருந்து சோதனை நடத்தி ரூ. 11 கோடியை பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் இயக்க நிர்வாகிகள் சென்ற காரில் சோதனை நடத்தி ரூ.2 கோடியை பறிமுதல் செய்தனர்.

நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பஸ்சில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி ரூ. 3 கோடியே 47 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி எம்.பி. தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உறவினர்கள் வீடுகளில் நேற்று நள்ளிரவு பறக்கும் படைமற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ. 25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த காடுசெட்டிப்பட்டி அருகே உள்ள எக்காண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பொல்லியப்பன். இவர் துணை தாசில்தாராகவும், தாலுகா வினியோக அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது வீட்டுக்கு நேற்று இரவு 9 மணிக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணி வரை சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்த ரூ. 25 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தான் ஓய்வு பெற்று அதன் மூலம் கிடைத்த பணமும், தனது மகன்கள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி கொடுத்த பணமும் இதுவாகும் என்று அவர் கூறினார். அந்த பணத்துக்கு ஆவணங்களை காட்டி வாங்கி செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.

பொல்லியப்பனின் உறவினரான நடராஜன் என்பவர் வீடு கும்முலூரில் உள்ளது. அவரது வீட்டிலும் நள்ளிரவு 12 மணி வரை சோதனை நடந்தது. இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. அவரது வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் குறித்து அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நடராஜன் தனது மகன் சீட்டு நடத்துவதாகவும், அந்த சீட்டு மூலம் வசூலித்த பணம் என்றும் கூறி அந்த சீட்டு மற்றும் நோட்டை எடுத்து காண்பித்தார்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த ரூ. 2 லட்சத்தை அவரிடமே கொடுத்துவிட்டு சென்று விட்டனர். நடராஜனின் தம்பி மற்றும் உறவினர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு எதுவும் சிக்கவில்லை.

இதேபோல அயிசாண்ட அள்ளி கிராமத்தில் உள்ள செல்லப்பன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில் ரூ. 70 ஆயிரம் இருந்தது.

இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அவர் பாங்கி பாஸ் புத்தகத்தை காட்டி பாங்கியில் இருந்து ரூ. 70 ஆயிரம் எடுத்து வந்ததற்கான ஆதாரத்தை காட்டினார். இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டு சென்று விட்டனர்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு ஆதரவாக புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா பிரசாரம் செய்து வருகிறார். இவரது பிரசார வாகனத்தை நேற்று 3 இடங்களில் மறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. #LokSabhaElections2019

Tags:    

Similar News