செய்திகள்

பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடி விடு- கமல் கட்சி வேட்பாளருக்கு மிரட்டல்

Published On 2019-04-05 09:03 GMT   |   Update On 2019-04-05 09:03 GMT
பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த தஞ்சாவூர் வேட்பாளருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam
சென்னை:

தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சம்பத் ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் முத்துப்பேட்டை பகுதியை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் வசிக்கிறார்.

சம்பத் ராமதாசை நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், ‘சென்னையைச் சேர்ந்த நீ இங்கு வந்து ஏன் தேர்தலில் போட்டியிடுகிறாய்? இது உனக்கு வேண்டாத வேலை. இது வரைக்கும் எவ்வளவு செலவு செய்தாயோ அதோடு சேர்த்து பணம் தருகிறோம். வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடு என்று மிரட்டியுள்ளனர்.

அதற்கு வேட்பாளர் நான் பணம் காசு எல்லாத்தையும் பார்த்தவன். அமெரிக்காவில் இருந்துவிட்டுதான் மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன். உங்கள் மிரட்டல்களுக்கு பணிய மாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த நபர், பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறாய். தஞ்சாவூர் எங்கள் கோட்டை தெரியுமா? இங்கு நீ எவ்வளவு வாக்குகள் வாங்குவாய்?. கொடுப்பதை வாங்கிக்கொண்டு போ’ என்று சொல்ல, ‘எதுவாக இருந்தாலும் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள்’ என சொல்லி சம்பத் ராமதாஸ் போனை வைத்துவிட்டார்.

வல்லம் பகுதியில் சம்பத் ராமதாஸ் தங்கியிருந்த இடத்தை காலி செய்து விட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றிற்கு வந்து விட்டார்.

இந்தத் தகவலை கமல்ஹாசனுக்கு தெரிவித்துள்ளனர். அவர் நடந்த உரையாடல்கள் அனைத்தையும் எழுதி தலைமைக்கு அனுப்பி வையுங்கள். அடுத்து என்ன செய்யலாம் எனச் சொல்கிறேன் என்று சொன்னதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர் தரும.சரவணன் கூறியதாவது:-

‘தஞ்சாவூர் தொகுதி மக்களிடம் எங்கள் கட்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எங்களின் பிரசாரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை பொறுத்துகொள்ள முடியாதவர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்குப் பயப்படுகிற ஆள் நாங்கள் இல்லை. என்றாலும், இதை உதாசீனப்படுத்தவும் முடியாது. கமல்ஹாசனிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்து, எழுதி அனுப்பியிருக்கிறோம்.

தேர்தல் ஆணையரிடம் இதைப் பற்றி பேச இருக்கிறோம். முதலில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரிடம் இது தொடர்பாகப் புகார் கொடுப்பதற்கு மனு எழுதி வைக்கச் சொன்னார். அதன்படி, நடந்தவற்றை எழுதிவைத்துள்ளோம். தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததுமே இதற்கான புகார் கொடுக்கப்படும்’ என்று கூறினார்.

வேட்பாளர் சம்பத் ராமதாஸ் கூறும்போது ‘பணம் காசு என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுகிற ஆள் நான் இல்லை. எனக்குப் பலமாக கமல் இருக்கிறார்’’

இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News