மீண்டும் மோடியை முதல்வராக்குவோம்- நடிகர் கஞ்சா கருப்பு உளறல் பேச்சால் சிரிப்பலை
பழனி:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு பா.ம.க வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
மாம்பழத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் வேட்பாளர் உள்பட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பழனியில் நடிகர் கஞ்சா கருப்பு பா.ம.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் நரேந்திரமோடியை பிரதமராக்குவோம் என்பதற்கு பதிலாக மோடியை முதல்வராக்குவோம் என கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் லட்டு தருகிறேன் என கூறினார். பஞ்சாமிர்தத்துக்கு பதிலாக லட்டு தருகிறேன் என்று கூறியதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தற்போது பொங்கலுக்கு அ.தி.மு.க அரசு வழங்கிய ரூ.1000 திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறித்தான் நடந்தது என்றார். மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செய்ததாக கூறியதால் பா.ஜ.கவினர் அதிருப்தி அடைந்தனர். நட்சத்திர பேச்சாளராக களம் இறங்கிய கஞ்சாகருப்பின் பேச்சு பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில் புகழ் பெற்றது பூட்டு, ஆனால் தற்போது அரசியல் தலைவர்கள் தொடர்ந்து உளறி வருவதால் திண்டுக்கல் என்றாலே உளறல் பேச்சு என்று உருவாகி விட்டது. #actorganjakaruppu #pmmodi #admk