செய்திகள்

தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியர் மனைவியிடம் நூதன முறையில் நகை, பணம் பறிப்பு

Published On 2019-03-16 04:54 GMT   |   Update On 2019-03-16 04:54 GMT
தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியர் மனைவியிடம் நூதன முறையில் நகை, பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் மேல்எண்டப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி பழனியம்மாள் (வயது42). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வங்கியில் அடகு வைத்திருந்த 18 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

அப்போது, அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானா அருகே உள்ள பழக்கடையில் பழங்களை வாங்கி கொண்டிருந்தனர்.

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேரும் ரூபாய் நோட்டை கீழே போட்டு கணேசனையும், பழனியம்மாளையும் திசை திருப்பிவிட்டு வண்டியில் இருந்த 18 பவுன் நகையையும், ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தப்பி சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தால் கணேசன் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் 2 மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் கணேசனையும், பழனியம்மாளையும் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்தாக தெரிகிறது.

பின்னர் அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானாவில் உள்ள பழக்கடை அருகே 2 பேரையும் நூதன முறையில் ஏமாற்றி நகையையும், பணத்தையும் எடுத்து சென்றது உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மதிக்கோன்பாளையம் ரவுண்டானா அருகே நூதன முறையில் பெண்ணிடம் நகை, பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News