செய்திகள்

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 69,450 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

Published On 2019-03-01 15:38 IST   |   Update On 2019-03-01 15:38:00 IST
வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. #Plus2Exam
வேலூர்:

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக ஈடுபட்டனர். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 200 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

அதுதவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிவரை நடந்தது. 94 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 441 மாணவர்களும், 14 ஆயிரத்து 587 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 28 பேரும் எழுதினர்.

தேர்வு மையங்களில் 1,677 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் 180 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். #Plus2Exam

Similar News