செய்திகள்

அதிமுக, பா.ஜனதாவுக்கிடையே மவுனயுத்தம்- துரைமுருகன்

Published On 2019-02-01 10:12 IST   |   Update On 2019-02-01 10:12:00 IST
அ.தி.மு.க., பாரதிய ஜனதாவுக்கிடையே மவுன யுத்தம் நடப்பதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan
வேலூர்:

வேலூர் சேண்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறினார். தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக அம்மாநில முதல்வர் குமாரசாமி டெல்லி பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்க உள்ளார். ஆனால், இவ்வி‌ஷயத்தில் தமிழக அரசு அமைதியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகும் என்ற விவரம் தெரியாமல் தமிழக அரசு உள்ளது.

ஆனால் தமிழக அரசை ஆளுபவர்கள் டெண்டர் வைப்பதிலும், வசூலிப்பதிலுமே குறியாக உள்ளனர். அரசு ஊழியர்களை பொறுத்தவரை தமிழக அரசு நீக்குபோக்குடன் செயல்பட வேண்டும். அதிகாரம் உள்ளது என்ற நிலையில் அரசு ஊழியர்களை சஸ்பெண்டு செய்தால் அரசு நிர்வாகம் நின்றுவிடும். அமைச்சர்கள் இல்லையென்றாலும் அரசு ஊழியர்கள் இருந்தால் ஆட்சி நடக்கும். தற்போது இவர்கள் செய்துள்ள செயலுக்கான பலன் நேரில் தெரியும்.

அ.தி.மு.க. சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுவை வாங்குகிறார்கள். மத்திய அரசை பயமுறுத்தவே இதனை செய்கின்றனர். மத்திய அரசும் தமிழக அரசை பயமுறுத்துகிறது. இது இருவருக்கும் இடையே நடக்கும் மவுன யுத்தமாகும்.

கஜா புயல் பாதிப்பில் இருந்து தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு விளைந்த நெல்லையும் கொள்முதல் செய்யாமல் அரசு அலைக்கழிக்கிறது.

இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இதற்கெல்லாம் மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். தேர்தல் கருத்துக்கணிப்புகளை தி.மு.க. பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில் நாங்களும் மக்களுடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #DuraiMurugan

Similar News