செய்திகள்

எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் - நடிகர் எஸ்வி சேகர்

Published On 2019-01-08 15:52 GMT   |   Update On 2019-01-08 15:52 GMT
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் என கரூரில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். #EdappadiPalanisamy #SVSekar
கரூர்:

பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது கரூர் உள்பட நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருகிறது. சமீபத்தில் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் விசாரணைக்கு அந்த வழக்கு வந்த போது, 23-ந்தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நடிகர் எஸ்.வி.சேகர், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் காரில் வந்தார். இது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, கரூர் கலெக்டரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேச வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேறொருவர் பதிவு செய்த ஒரு தகவலை பேஸ்புக்கில் நான் பிறருக்கு பகிர்ந்தேன் என்பது தான் குற்றச்சாட்டு. அது என்னுடைய கருத்தோ அல்லது எழுத்தோ அல்ல. இதுகுறித்து நான் தெளிவுபடுத்திய பிறகும் வழக்கு போடப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரே பிரச்சினை தொடர்பாக வழக்கு பல இடங்களில் விசாரிக்கப்படுகிறது.

எனவே ஒரு இடத்தில் மட்டும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும். மேலும் சட்டரீதியாக வழக்கை நான் அணுகி வருவதால், அது எனக்கு உரிய நியாயத்தை வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நானே ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறேன். இன்னும் சில வாரத்தில் ஒரு வார பத்திரிகை கூட தொடங்குகிறேன். அப்படி இருக்கையில் பத்திரிகையாளரை அவமதிக்கும் எண்ணம் துளி கூட எனக்கு கிடையாது. திருவாரூர் தொகுதி இடைதேர்தலை நிறுத்தியது என்பது நியாயமான கோரிக்கையாகும்.

பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் வரவே அதிகவாய்ப்பு உள்ளது. நானாக விருப்பப்பட்டு தேர்தலில் போட்டியிடமாட்டேன். கட்சி (பா.ஜ.க.) பார்த்து பாராளுமன்ற தேர்தலில் நிற்க சொன்னால் கண்டிப்பாக போட்டியிடுவேன். அதுவும் தென்சென்னையில் நிற்க விருப்பம் தெரிவிப்பேன். தமிழக அரசு செயல்பாடு நன்றாக இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமியின் என்ன செய்ய போகிறார் என்று நினைத்தோம். ஆனால் அதற்கும் மேலாக அவர் சிறப்பாக செயல்படுகிறார். தமிழக அரசின் நலனுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும்.

கேரளாவில் பினராயி விஜயனின் அரசு மதவெறியை தூண்டும் விதமாக உள்ளது. சபரிமலை விவகாரம் தொடர்பான இந்துக்கள் எழுச்சியை இதுவரை யாரும் கண்டதில்லை. மேலும் கம்யூனிஸ்டு அரசின் அழிவுக்கு இது காரணமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனை, நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து பேசிவிட்டு, அதே காரில் திரும்பி சென்றார். #EdappadiPalanisamy #SVSekar
Tags:    

Similar News