செய்திகள்

யானைகள் உயிரிழப்பை தடுக்க கோரி வழக்கு: அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட் கண்டனம்

Published On 2018-12-04 11:12 GMT   |   Update On 2018-12-04 11:12 GMT
யானைகள் உயிரிழப்பை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதலாமா? என்று அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள். #MaduraiHCBench
மதுரை:

தேனி மாவட்ட வனப்பகுதியின் பெரும்பாலான இடங்கள், கடந்த 2012-ல் மேகமலை வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இந்த வனப்பகுதியில் சிறுத்தை, மான், யானை, காட்டெருமை என 60-க்கும் மேற்பட்ட விலங்குகளும், தோதகத்தி, தேக்கு, சந்தன மரம் போன்ற அரிய வகை மரங்களும் உள்ளன.

கடந்த நவம்பர் 26-ந்தேதி கம்பம் கிழக்கு வனச்சரகம், வெண்ணியாறு கிழக்கு மற்றும் மேற்கு பிரிவின் இணைப்பு பகுதியில் 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தன. இதற்கு முன்னர் பல யானைகள் வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.

இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானது. இந்த செய்திகளின் அடிப்படையில், மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்தது.

அதில், வெண்ணியாறு வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கவும், இதற்கு மின்சாரத்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மேகமலை வன காப்பாளர் நேரில் ஆஜரானார். யானைகள் உயிரிழப்பு குறித்த நீதிபதிகளின் கேள்விக்கு ஜூன் மாதம் 2 யானைகளும், செப்டம்பரில் ஒரு யானையும், நவம்பரில் 2 யானைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, மின் கம்பிகளை உயர்த்தக் கோரி மின்வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், ஜூன் மாதமே யானை உயிரிழந்த நிலையில், அதனைத் தடுக்க கடிதம் எழுதுவது மட்டும் போதுமா? என கடிந்து கொண்டனர்.

மேலும் இதுபோன்ற வழக்கில், யானை உயிரிழப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அரசு வக்கீல் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்வாரிய தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேகமலை பகுதியில் யானைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் மேகமலை வன காப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும் மதுரை மின்வாரிய செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் வருகிற 13-ந்தேதி மின் கம்பிகளை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #MaduraiHCBench
Tags:    

Similar News