செய்திகள்

ஆம்பூரில் நகை கடை உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Published On 2018-11-03 06:14 GMT   |   Update On 2018-11-03 06:14 GMT
ஆம்பூரில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான நகைகடை, வீடுகள் உள்பட 5 இடங்களில் 3-வது நாளாக வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். #ITRaid
ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பிரபல தொழிலதிபர் சகோதரர்கள் சி.லிக்மிசந்த் சிங்வி, அசோக்சந்த் சிங்வி. இதில் லிக்மிசந்த் சிங்வி ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வருகிறார். அசோக்சந்த் சிங்வி நகைக்கடை மற்றும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்

இவர்களின் வீடு மற்றும் நகைக்கடை ‌ஷராப் பஜார் பகுதியில் உள்ளது. ஆயில் நிறுவனம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க்கும் உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் 8 வாகனங்களில் பெண் அதிகாரி உள்பட சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஆம்பூர் வந்தனர். அவர்கள் நகைக்கடை, சகோதரர்களின் வீடுகள், ஆயில் நிறுவனம், பெட்ரோல் பங்க், குடோன், ரியல் எஸ்டேட் அலுவலகம் ஆகிய இடங்களிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நகைக்கடை, வீடுகள், ஆயில் நிறுவனம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

அதேபோல் பணியாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. நகைக்கடைக்கு அருகே உள்ள குடோன் கிடங்கை திறந்து சோதனை நடத்தினர்.

நேற்று இரவிலும் தொடர்ந்த சோதனை விடிய விடிய நடந்தது. 3-வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது.

இதில் முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மேலும் 2 வாகனங்களில் கூடுதலாக வருமானவரித்துறை அதிகாரிகள் வரவழைக்கபட்டுள்ளனர்.

அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 3-வது நாளாக சோதனை நடப்பதால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  #ITRaid
Tags:    

Similar News