செய்திகள்

குன்னூரில் ஜன்னல் வழியாக பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கியை போட்ட போலீஸ்காரர்

Published On 2018-11-03 05:09 GMT   |   Update On 2018-11-03 05:09 GMT
குன்னூரில் பஸ்சில் இடம் பிடிக்க போலீஸ்காரர் ஜன்னல் வழியாக துப்பாக்கியை போட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் குன்னூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குன்னூர் வரும் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக மூப்பர்காடு, கொலக்கம்பை, முள்ளிகூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து வருகிறார்கள். இதனால் பஸ்களில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று மாலை முள்ளிகூர் செல்லும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் துண்டு, கைப்பை உள்ளிட்டவைகளை போட்டு சீட் பிடித்தனர். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்ய 2 போலீஸ்காரர்கள் வந்தனர். அதில் ஒருவர் ஜன்னல் வழியாக தனது துப்பாக்கியை சீட்டில் போட்டு இடம் பிடித்தார்.

இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பயணிகள் கூறும்போது, பஸ்களில் சீட் பிடிக்க துப்பாக்கியை போடும்போது பயணிகள் அச்சம் அடைந்தனர். சமூக விரோதிகள் துப்பாக்கியை எடுத்துச்சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். போலீசார் இந்த செயலை தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினர்.

போலீஸ்காரர் பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

Tags:    

Similar News