செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு- புதுவை எம்எல்ஏ வுக்கு ஜெயில் தண்டனை

Published On 2018-10-31 10:01 GMT   |   Update On 2018-10-31 10:01 GMT
சொத்து குவிப்பு வழக்கில் புதுவை எம்.எல்.ஏ. அசோக் ஆனந்துக்கு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #ashokanandmla

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த்.

இவரது தந்தை ஆனந்தன். இவர் புதுவை பொதுப் பணித்துறையில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தலைமை என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் அசோக் ஆனந்த் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 2008-ம் ஆண்டு முதல் புதுவை சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நடந்தது. இதற்கிடையே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனின் மனைவி விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு மரண மடைந்தார்.

வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மாலை புதுவை தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராமும் விதித்தார்.

மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 57 லட்சம் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்

இதனையடுத்து அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் இந்த வழக்கை மேல் முறையீடு செய்யும் வரை தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே சி.பி.ஐ. தரப்பிலும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிகிறது. #ashokanandmla

Tags:    

Similar News