செய்திகள்

மகா புஷ்கர விழா - பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்

Published On 2018-10-21 05:05 GMT   |   Update On 2018-10-21 05:05 GMT
தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் 11-வது நாளான இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். #ThamirabaraniPushkaram #OPS
சிங்கை:

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகளும், வேள்விகளும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடக்க நாளில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் தாமிரபரணியில் நீராட வந்த வண்ணம் உள்ளனர்.

விழாவின் 11-வது நாளான இன்று தாமிரபரணியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு அம்பை வந்தார். அம்பையில் உள்ள ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை 7.50 மணிக்கு பாபநாசத்திற்கு வந்தார்.



பாபநாசம் தலையணை அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். முன்னதாக அவர் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

இதன் பிறகு அவர் பாபநாசம் பாபநாசம் நாதர் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி அம்பை பாபநாசம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாபநாசத்தில் தரிசனம் செய்ததும் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூருக்கு சென்றார். அங்குள்ள தாமிரபரணியில் வழிபாடு செய்த அவர் பின்னர் அப்பகுதியில் உள்ள கஜேந்திரபெருமாள் கோவிலில் நடந்த புஷ்கர பூஜையில் கலந்து கொண்டார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #ThamirabaraniPushkaram #OPS

Tags:    

Similar News