செய்திகள்
இலங்கை கடற்படையிடம் மீனை பறிகொடுத்த வாணகிரி மீனவர்கள்

ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

Published On 2018-10-03 05:28 GMT   |   Update On 2018-10-03 05:28 GMT
வேதாரண்யம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்து கொண்டு மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNFishermen
வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மீன்பிடி சீசன் கடந்த 1-ந் தேதி தொடங்கியால் அங்கு ஏராளமான மீனவர்கள் வந்து மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த வாணகிரியை சேர்ந்த மீனவர்களும் கோடியக்கரைக்கு வந்துள்ளனர். நேற்று வாணகிரியை சேர்ந்த மீனவர்கள் 20 படகுகளில் சென்று மீன் பிடித்தனர். அவர்கள் இன்று காலையில் கரைக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு படகில் வந்தனர். அவர்கள் வாணகிரியை சேர்ந்த 3 படகுகளில் ஏறி மீனவர் மிரட்டி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை அள்ளி கொண்டு அவர்களை விரட்டி விட்டனர். இதனால் அந்த படகுகளில் சென்ற தமிழ்மணி (வயது 24), தீபன் (20), அருள்மணி (25), தேன்ராஜ் (24), ராஜேஷ், சுப்பிரமணியன், ராஜீ, பாலகிருஷ்ணன், பாரதி, வேல்முருகன், சஞசய், சக்திவேல், சுரேஷ், மகேந்திரன், வினியரசன் ஆகிய 15 மீனவர்களும் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

கோடியக்கரை பகுதியில் கடந்த சில நாட்களில் 3 முறை கடற்கொள்ளையர்கள் வந்து மீனவர்களை தாக்கி அவர்களது மீன்பிடி வலைகளை அறுத்து சென்றனர்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்பு இலங்கை கடற்படையினர் 3 படகுகளில் மீன்களை அள்ளி சென்ற சம்பவம் மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடற்படையினர் கேட்டதும் மீனவர்கள் மீன்களை கொடுத்ததால் அவர்களை தாக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோடியக்கரையில் சீசனுக்கு மீன் பிடிக்கவந்த மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்கள், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்து மீன்படிக்க செல்லும் மீனவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். #TNFishermen
Tags:    

Similar News