செய்திகள்

கேளம்பாக்கம் அருகே நள்ளிரவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல்

Published On 2018-09-21 12:12 IST   |   Update On 2018-09-21 12:12:00 IST
கேளம்பாக்கம் அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். #lawcollegestudent

திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சுமார் 200 பேர் தங்கியுள்ளனர்.

நேற்று இரவு 2 மாணவர்கள் தாழம்பூர் சென்றுவிட்டு கல்லூரி விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தாழம்பூர் கூட்டுரோடு பகுதியில் வந்த போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மாணவர்களை நிற்குமாறு கூறியும் அவர்கள் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை உரக்கச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய மாணவர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

இதற்கிடையே விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் போலீசார் தங்களை தாக்கியதாக சக மாணவர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இரவு 11 மணி அளவில் விடுதி நுழைவு வாயில் முன்பு புதுப்பாக்கம் - சிறுசேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.“ மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. சுப்புராஜூ, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #lawcollegestudent

Tags:    

Similar News