செய்திகள்

அதிகாரிகள் வருவதையறிந்து தாலி கட்டும் நேரத்தில் பிளஸ்-2 மாணவி திருமணம் நிறுத்தம்

Published On 2018-09-12 05:16 GMT   |   Update On 2018-09-12 05:16 GMT
அதிகாரிகள் வருவதையறிந்து, பிளஸ்-2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு திருமண கோஷ்டி ஒட்டுமொத்தமாக மண்டபத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கு, பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். மாப்பிள்ளை பார்த்து, நிச்சயித்து இன்று காலை திருமணத்திற்கு தேதி குறித்தனர்.

திருமண அழைப்பிதழை அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சுப முகூர்த்த நேரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகளை தடபுடலாக செய்தனர்.

திருமணம் மதனஞ்சேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடக்கவிருந்தது. நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிளஸ்-2 மாணவி மைனர் என்பதால், சைல்டு லைன் அமைப்பினருக்கு போனில் புகார் சென்றது.

இதையடுத்து, சமூக பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து இன்று காலை மதனஞ்சேரி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது, மண்டபத்தில் ஒருவர் கூட இல்லை. தோரணங்கள் கட்டப்பட்டு மணவறை தயார் நிலையில் இருந்தது. தாலி கட்டும் நேரத்தில் அதிகாரிகள் வருவதையறிந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மணமக்கள் கோஷ்டி ஒட்டு மொத்தமாக தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக, விசாரணை நடத்த திருமண கோஷ்டியை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News