செய்திகள்

டீசல் விலை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் - மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் பேட்டி

Published On 2018-08-31 11:14 IST   |   Update On 2018-08-31 11:14:00 IST
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. #Petrol #Diesel

நாமக்கல்:

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நாமக்கல்லில் மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-

டீசல் விலை உயர்வு வரலாறு காணாத வகையில் உள்ளது. டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் விலைவாசி விலை கடுமையாக உயரும். லாரி உதிரி பாகங்கள் விலை உயர்வு, டயர் விலை உயர்வு, காப்பீட்டு பிரீமியம் உயர்வால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலைவாசி விலை கடுமையாக உயரும் நிலை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதியில் இருந்து 2018 ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ஒரு வருடத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.13.90 உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 89 பைசா உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் ரூ 2.82 உயர்ந்துள்ளது.

மேலும் டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் லிட்டருக்கு 24 ரூபாய் குறையும். மாநில அரசு இதற்கு ஏற்க மறுப்பதாக மத்திய அரசு கூறுகிறது. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு எதிர்த்தும் அதனை கொண்டு வந்த மத்திய அரசு டீசல் விலையை குறைக்க மாநில அரசை குற்றம்சாட்டி மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. இந்த டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News