செய்திகள்

திருவாரூர் - திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுக பலம் அதிமுகவுக்கு புரியும்- தங்க தமிழ்செல்வன்

Published On 2018-08-30 15:01 GMT   |   Update On 2018-08-30 15:01 GMT
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுக பலம் அதிமுகவுக்கு புரியும் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் வரும் செப்டம்பர் 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பொதுகூட்டம் நடைபெறும் இடத்தை தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

வருகிற செப்டம்பர் 15-ந் தேதி புதுக்கோட்டையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை பொது செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டேன்.

தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை. வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்டு ஆட்சி தொடரும்.

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். அ.தி.மு.க., பா.ஜ.க. வோடு கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அ.ம.மு.க.தான் வெற்றி பெறும். அப்போது அ.ம.மு.க. தான் டாப்பு. அ.தி.மு.க. டூப்பு என்பது தெரியவரும்.

அதன் பின்னர் ஆட்சியையும் கட்சியையும் எங்களிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி. மு.க. நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தது. ஆனால் கருணாநிதி இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யாதது ஏன். இதிலிருந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. சமீப காலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது

தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk

Tags:    

Similar News