செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1932 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-08-25 10:37 GMT   |   Update On 2018-08-25 10:37 GMT
தமிழகத்தில் காலியாக உள்ள 1932 பணியிடங்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
ஈரோடு:

வருவாய்த்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஈரோடு நகர நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் விழா மற்றும் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரசார துவக்க விழா ஈரோடு கருங்கல்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, செல்வகுமார் சின்னையன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர நிலவரி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பில் 200 பயனாளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பட்டா வழங்கினார். அமைச்சர் தங்கமணி பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் கருப்பணன் பயனாளிகளுக்கு துணிப்பை மற்றும் சணல் பை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வழியில் நடைபெறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் காலியாக உள்ள 1932 பணியிடங்களை பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப உத்தரவு போடப்பட்டுள்ளது

அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊதியத்தை நிர்ணயிக்க தணிக்கைத் துறை இயக்குனர் பரிந்துரைப்படி ஒரு பள்ளியில் இத்தனை மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விதிமுறையை கணக்கில் கொண்டு நீதித்துறை பரிந்துரை ஆகிய விவரங்கள் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News