செய்திகள்

சொந்த கிராமத்திலேயே வீடுகளை இழந்து அகதிகள்போல் வாழ்கிறோம் - பெண்கள் கண்ணீர் பேட்டி

Published On 2018-08-20 08:22 GMT   |   Update On 2018-08-20 08:22 GMT
சொந்த கிராமத்திலேயே உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அகதிப்போல் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பெண்கள் கூறினார். #Karnatakarain

சிதம்பரம்:

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென்று 2.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர கிராமங்களான திட்டுக்காட்டூர், பெரம்பட்டு, கீழகுண்டலபாடி உள்பட பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வீடுகளை இழந்த பலர் அங்குள்ள புயல் பாதுகாப்பு மையங்களிலும், அரசு பள்ளி மற்றும் கோவில்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கீழகுண்டலபாடியை சேர்ந்த செல்வ ராணி (வயது 22) என்பவர் வீடும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது முதலில் பாதிக்கப்படுவது எங்கள் கிராமம் தான். எங்கள் கிராமத்தில் பலர் விவசாயம் செய்கிறார்கள். பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தும், உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இல்லாமல் சொந்த கிராமத்திலேயே அகதியைப்போல் வாழ்கிறோம்.

எனவே தமிழக அரசு உடனடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும் கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் கிராமத்தில் புகுந்து விடாமல் தடுக்க கரையை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வெள்ளத்தில் வீடு இழந்த ஜெயந்தி(45) என்பவர் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் எனது வீடு சேதம் அடைந்துள்ளது. இதனால் நான், என் கணவர் மற்றும் குழந்தைகள் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் தவிக்கிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த 5 நாட்களாக எங்கள் கிராமத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளை இழந்து பலர் தவிக்கிறார்கள். சொந்த கிராமத்திலேயே உணவு, தண்ணீர் கிடைக்காமல் அகதிப்போல் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக சரிவர உணவு கிடைக்கவில்லை. அதேபோல் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வெள்ளநீரை காய்ச்சி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் தொற்றுநோய் ஏதும் ஏற்படாமல் இருக்க மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.

வருங்காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News