செய்திகள்
குற்றாலம் மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தடாகத்தில் தண்ணீர் விழும் காட்சி.

குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளம் - குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்

Published On 2018-08-17 09:13 GMT   |   Update On 2018-08-17 09:13 GMT
குற்றாலம் அருவிகளில் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Courtallam
தென்காசி:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடக்கத்திலே குற்றாலத்தில் சீசன் ஆரம்பம் ஆகும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் சீசன் களை கட்டியது. இடையிடையே பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே அருவிகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சீசன் முழுஅளவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

இதனால் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றாலம் புலியருவியில் நேற்று முன்தினம் குளிக்க சென்ற வாலிபர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் புலியருவியில் விழுந்து வரும் ஓடை பகுதியில் வரும் தண்ணீரில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயினருவியில் இருந்து வரும் தண்ணீர் சிற்றாற்றில் சேருவதாலும், காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் சிற்றாறில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சிற்றாற்று கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் சிற்றாற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள்.

சிற்றாற்று பாசன குளங்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Courtallam
Tags:    

Similar News