செய்திகள்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

ஆரல்வாய்மொழியில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2018-08-06 15:39 IST   |   Update On 2018-08-06 15:39:00 IST
ஆரல்வாய்மொழியில் தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உள்ளது.

இக்கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்று காலை வகுப்புகள் தொடங்கியதும், மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து ஆரல்வாய்மொழி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இது போல கல்லூரி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பல்கலைக்கழக தேர்வுகள் முன்பு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக நடத்தப்படும்.

ஆனால் இப்போது பல்கலை கழக தேர்வுகள் அனைத்தும் ஆங்கில வழியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பல்கலைக்கழகம் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இது பற்றி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் முதல்வரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மனோன்மணியம் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளை இனி மாணவ-மாணவிகள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் எனக்கூறியுள்ளது.

இதனை கண்டித்து போராட்டம் நடத்துவதாக மாணவ-மாணவிகள் கூறியுள்ளனர். அவர்களின் போராட்டம் குறித்து பல்கலை கழக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம். அவர்கள் எடுக்கும் முடிவுகள் படியே தேர்வுகள் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர் .
Tags:    

Similar News