செய்திகள்

வாகன சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு

Published On 2018-08-06 09:31 GMT   |   Update On 2018-08-06 09:31 GMT
வாகன சோதனையில் சிக்கி போலீசுடன் வாக்குவாதம் ஈடுபட்டு திடீரென்று அடையாறு ஆற்றில் குதித்த வாலிபரின் சடலம் மூன்று நாட்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற வாலிபர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் போலீசில் சிக்கினார்.

குடிபோதையில் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவரை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் வண்டிக்குரிய ஆவணங்களை கேட்டனர். குடிபோதையில் இருந்ததால் பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர். இதனால் போலீசாருடன் ராதாகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது எனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் என்று கூறிய ராதாகிருஷ்ணன், அபிராமபுரத்தில் கொண்டு விடுவதற்காக இன்னொரு நண்பரை ஏற்றிச் செல்கிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கூறினார்.

ஆனால் போலீசார், ராதாகிருஷ்ணன் அங்கிருந்து செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் தன் மீது வழக்கு போட்டு விடுவார்களோ என போலீசுக்கு பயந்து ராதாகிருஷ்ணன், பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் ராதாகிருஷ்ணனை கண்டு பிடிக்க முடியவில்லை.

நேற்று 2-வது நாளாக தேடினர். அப்போதும் ராதாகிருஷ்ணன் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இன்று 3-வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அடையாறு ஆற்று முகத்துவாரத்தில் உள்ள மடையின் 3-வது கண்ணில் ராதாகிருஷ்ணன் உடல் இருப்பதை பார்த்தனர்.

ஆற்றில் குதித்தபோது சேற்றில் சிக்கி ராதாகிருஷ்ணன் பலியாகி உள்ளார். பின்னர் தண்ணீரில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உடல் மடையில் சிக்கி உள்ளது.

ராதாகிருஷ்ணன் சாவுக்கு போலீசாரே காரணம் என்று குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் திரு.வி.க. பாலம் அருகே இன்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். இதன் காரணமாக மறியல் கைவிடப்பட்டது. #Tamilnews

Tags:    

Similar News