செய்திகள்

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - 100 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை

Published On 2018-07-28 06:37 GMT   |   Update On 2018-07-28 06:37 GMT
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 3 நாட்களில் 100 அடியை எட்டி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #BhavaniSagarDam
ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான விவசாய விளைநிலங்களின் ஆதாரமாக விளங்கி வருவது பவானிசாகர் அணையாகும். அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். இதில் சேறும், சகதியும் போக 105 அடிக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியும்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகளவில் வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27 அடி உயர்ந்து உள்ளது. இன்னும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,142 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 650 கனஅடியும், குடிநீருக்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 3 நாட்களில் 100 அடியை எட்டி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #BhavaniSagarDam

Tags:    

Similar News