அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.63 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. நிர்வாகி கைது
திண்டுக்கல்:
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆண்டியப்ப பிள்ளை தெருவைச் சேர்ந்த லாரி டிரான்ஸ்போர்ட்டு நடத்தும் செந்தில்குமார் (54), உலுப்பகுடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (48), ஆகியோர் தங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருமாறு அணுகியுள்ளனர்.
ரவிச்சந்திரனும் தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக், டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர், ஆய்வக உதவியாளர் ஆகிய வேலைகளை வாங்கித் தர முடியும் என கூறியுள்ளார்.
அதன் பேரில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி கடந்த 2015-ம் ஆண்டு நத்தம் பகுதியைச் சேர்ந்த 11 பேரிடம் இருந்து ரூ4½ லட்சம் முதல் ரூ. 5½ லட்சம் வரை வசூலித்து ரூ.63 லட்சம் பணத்தை கொடுத்தனர். ஆனால்சொன்னபடி அவர் வேலை வாங்கித் தரவில்லை. தங்களை மோசடி செய்ததை உணர்ந்த அவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். உடந்தையாக இருந்த அவரது தந்தை கோபாலை தேடி வருகின்றனர்.