செய்திகள்

பகுத்தறிவு பேசி போலி வே‌ஷம் போடுகிறார் கமலஹாசன் - தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு

Published On 2018-07-13 10:11 IST   |   Update On 2018-07-13 10:11:00 IST
அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார். ஆனால் பகுத்தறிவு பேசி போலி வே‌ஷம் போடுகிறார் கமலஹாசன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan #KamalHaasan
மதுரை:

பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு அகில இந்திய தலைவர் அமித் ஷா வந்து சென்றது பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய உற்சாகத்தை தந்துள்ளது.

தமிழகத்திற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பல நல்ல திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்படாத எத்தனையோ திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி முடிவெடுக்கும். வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று தினகரன் போன்றவர்கள் கூறுகிறார்கள். இந்த கூட்டணியில் யார், யார் இருக்க வேண்டும் என்பதை பா.ஜனதா கட்சி தான் முடிவு செய்யும்.



அமாவாசை நாளில் கட்சியை ஆரம்பிக்கிறார். அமாவாசை நாளில் கொடியேற்றுகிறார். ஆனால் “மய்யம்” என்ற பெயரில் கட்சியையும் ஆரம்பித்து பகுத்தறிவு பேசுகிறார் கமலஹாசன். அப்படி பேசி போலி வே‌ஷம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் “நீட்” தேர்வில் நடைபெற்ற குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும். தமிழ் மொழியில் வினா மொழி பெயர்ப்பு சரியாக செய்யப்பட்டிருக்க வேண்டும். இதை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கவனித்திருக்க வேண்டும்.

தமிழக அரசுடன் தாய், பிள்ளை உறவுடன் மத்திய அரசு செயல்பட்டு தமிழக வளர்ச்சிக்காக முன் உரிமை அளித்து வருகிறது.

பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது ஜனநாயகத்தில் அந்த கட்சிக்கு உள்ள உரிமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #KamalHaasan
Tags:    

Similar News