செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்களும், மதுபாட்டில்களும்.

மயிலாடுதுறையில் சொகுசு கார்களில் மதுபானம் கடத்தி வந்த 8 பேர் கைது

Published On 2018-07-02 10:50 IST   |   Update On 2018-07-02 10:50:00 IST
மதுபானம், சாராயம் கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டது மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மதுபானம், சாராயம் கடத்தல் நடந்து வருகிறது. இவைகளை தடுக்க சோதனை சாவடிகள் செயல்பட்டபோதும் மது கடத்தல் நடைபெறுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார், பெரம்பூர், குத்தாலம், சித்தர்காடு ஆகிய இடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.

அப்போது மதுபாட்டில்களையும் சாராயத்தையும் கடத்தி வந்த 2 சொகுசு கார்கள் ஒரு மினி லாரி ஆகியவை பிடிபட்டன. அவைகளில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 544 மதுபாட்டில்கள், 600 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த காரைக்காலை சேர்ந்த சதீஷ் (வயது31), வின்ஸ்ராஜ் (21), மதிவாணன் (40), கார்த்திகேயன் (28), சுரேஷ் (44), விக்டர் (32), பவித்ரன் (19) உள்பட 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மதுகடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள், வாகனங்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

காரைக்கால், கும்பகோணம் பகுதிக்கு மதுபாட்டில்களை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இவர்களின் பின்னணியில் முக்கிய நபர்கள் உள்ளார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News