செய்திகள்

மக்கள் முடிவின்படி திட்டங்களை கொண்டு வரவேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

Published On 2018-07-02 05:16 GMT   |   Update On 2018-07-02 05:16 GMT
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்கள் முடிவின்படி திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #ChennaiSalemGreenExpressway #PremalathaVijayakanth
தூத்துக்குடி:

தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் கடந்த முறை தூத்துக்குடிக்கு வந்தபோது அ.குமரெட்டியாபுரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்றேன். அந்த தண்ணீர் குடிக்க தகுதியானதா? இல்லையா? என்பதை பரிசோதனை செய்து தெரிவிப்பேன் என்று கூறினேன். அதன்படி அந்த தண்ணீர் ஆய்வகத்தில் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த தண்ணீர் குடிப்பதற்கோ, கட்டுமான பணிகளுக்கோ, விவசாயத்துக்கோ தகுதியில்லாதது என்று சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகையால் நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்களுடைய போராட்டம் நியாயமானது. ஆனால் 13 அப்பாவி உயிர்களை இழந்தது மிகவும் பரிதாபமானது. மக்களின் போராட்டம் மூலமே அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளது.



சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை தொடர்பாக மக்களின் கருத்தை கேட்க வேண்டும். மக்கள் முடிவின்படி திட்டங்களை கொண்டு வரவேண்டும். மக்கள் கருத்தை கேட்டு, அவர்களின் ஒத்துழைப்போடு செய்ய வேண்டும்.

எல்லா திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தால் தமிழ்நாடு முன்னேறுவதில் மிகப்பெரிய கேள்விக்குறி வரும். ஆனால் இந்த ரோடு அவசியமா? என்பதை அந்த பகுதி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் அந்த பகுதியில் அதிகம் உள்ளது.

விவசாயிகளின் நிலம் எடுக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சேலம் வளர்ச்சி பெற விமான நிலையம் தேவை. சேலத்தில் விமான நிலையம் நிச்சயம் வரவேண்டும். அதற்காக எடுக்கப்படும் நிலத்துக்கான இழப்பீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway #PremalathaVijayakanth

Tags:    

Similar News