செய்திகள்
அரசு பஸ்சில் இந்தி எழுத்தில் ஊர் பெயர் இடம் பெற்றிருந்த காட்சி.

அரசு டவுன் பஸ்சில் இந்தியில் ஊர் பெயர்- கண்டக்டர் மீது நடவடிக்கை

Published On 2018-06-19 13:23 IST   |   Update On 2018-06-19 13:23:00 IST
பெருந்துறையில் இருந்து கவுந்தப்பாடிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் பெயர் பலகை இந்தி எழுத்தில் இருந்தது தெரியவந்ததால் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கவுந்தப்பாடிக்கு (எண்17) டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கிறது.

இந்த பஸ்சில் திடீரென இந்தி எழுத்தால் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதாவது ஊர் போர்டுக்கு மேலே பெருந்துறை மார்க்கெட் என்று ஆங்கிலத்திலும் அதன் கீழே இந்தி எழுத்திலும் பெயர் இருந்தது.

இதை கண்ட பொது மக்கள் குறிப்பாக சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்தி எழுத்தில் ஊர் பெயரா? என ஆச்சரியப்பட்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. அதே போல் பஸ்களிலும் இந்தியை கொண்டு வந்து விட்டார்களா? என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணி இந்தி எழுத்தால் எழுதப்பட்ட ஊர் பெயர் போர்டை படம் எடுத்து சமூக வலைதளத்திலும் வாட்ஸ்- அப்பிலும் பரவ விட்டார்.

இது மேலும் பலருக்கு பரவ அவர்களும் அதிர்ச்சி அடைந்து இது குறித்து தங்கள் எதிர்ப்பு கருத்தை வாட்ஸ்-அப்பில் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் மேலும் பரவ இது தொடர்பாக அந்த பகுதி வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கேட்டபோது, “பெருந்துறை சிப்காட் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் பெருந்துறை சந்தைக்கு வருவார்கள். பஸ்சில் ஊர் பெயர் தெரியாமல் வேறு பஸ்சில் சென்று ஏமாற்றம் அடைகிறார்கள். இதற்காகத் தான் அவர்கள் தெரிந்து கொள்ள இந்தியில் பெருந்துறை மார்க்கெட் என போர்டில் பொறிக்கப்பட்டது. வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல. இந்தியை திணிக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல” என்று கூறினார்.

இந்தியில் எழுதப்பட்ட விவகாரம் மேலும் பரபரப்பாக பேச சம்பந்தப்பட்ட அரசு டவுன் பஸ்சில் இருந்த இந்தி எழுத்து உடனடியாக அழிக்கப்பட்டு விட்டது.

மேலும் அந்த பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த சீனிவாசன் என்பவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் சஸ்பெண்டு செய்து ஈரோடு கோட்ட பொது மேலாளர் உத்தரவிட்டார். #Tamilnews

Tags:    

Similar News