செய்திகள்

ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு மலைரெயில் இயக்கம்

Published On 2018-06-03 23:16 IST   |   Update On 2018-06-03 23:16:00 IST
ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, நீலகிரி மாவட்டத்தில் அவர்களது நாட்டில் உள்ள சீதோஷ்ணம் போன்ற காலநிலை நிலவியதால், அவர்கள் இங்கு குடியேற நினைத்தனர். ஆங்கிலேயர்களுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் உள்பட இதர பொருட்களை கொண்டு வருவதற்கு வாகன உதவி தேவைப்பட்டது. அதற்காக ஆங்கிலேயர்கள் மலை ரெயிலை தேர்வு செய்தனர்.



இதற்காக ரெயில் பாதை அமைக்க 1855-ம் ஆண்டு நீலகிரி ரெயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது. இந்த கம்பெனிக்கு ராபர்ட் மில்லர் என்பவர் முதல் தலைவராக செயல்பட்டார். அப்போது ரூ.25 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. இந்த மலை ரெயில் பாதை மொத்தம் 46.61 கி.மீ. தூரம் ஆகும். இதில் மொத்தம் 212 வளைவுகள் உள்ளன. 16 குகைகளும், 31 பெரிய பாலங்களும், 219 சிறிய பாலங்களும் உள்ளன.

தற்போது, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்காகவே மலை ரெயில் இயக்கப்படுகிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட நீலகிரி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய ரெயிலாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் நிலக்கரி நீராவி என்ஜின் கைவிடப்பட்டு டீசல் மற்றும் மின்சார ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் இயக்கப்படுகிறது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி- கேத்தி இடையே சிறப்பு மலைரெயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குலசிரேஸ்தா மற்றும் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பராவ் ஆகியோர் ரெயில்வே வாரியத்திடம் ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்க பரிந்துரை செய்தனர்.

அதன்படி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறு சுற்றுலா என்ற பெயரில் ஊட்டி-கேத்தி இடையே நேற்று மலை ரெயில் இயக்கப்பட்டது. சேலம் ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் சந்திரபால் மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளுக்கு தொப்பி, ஊட்டி மலை ரெயில் குறித்த கையேடு போன்றவற்றை வழங்கினார். ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு லவ்டேல் வழியாக கேத்தியை 3 மணிக்கு சென்றடைந்தது. அங்கு மலை ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு ஒரு சமோசா, ஒரு கப் வெஜிடபிள் சூப் ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர் கேத்தியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு லவ்டேல் வழியாக ஊட்டிக்கு 4 மணிக்கு மலைரெயில் வந்தடைந்தது.

மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் கேத்தி பள்ளத்தாக்கை கண்டு ரசித்தனர். மலை ரெயிலில் பயணிக்க முதல் வகுப்புக்கு ஒரு நபருக்கு ரூ.400, 2-ம் வகுப்புக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மலை ரெயில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் கோவை ரெயில் நிலைய முதன்மை வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு, சுற்றுலா அலுவலர் ராஜன், பாரம்பரிய நீராவி மலை ரெயில் அறக்கட்டளை தலைவர் நடராஜ், ஊட்டி ரெயில் நிலைய அதிகாரி பிரமோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News