செய்திகள்

சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம் - யுவராஜா

Published On 2018-05-15 11:39 IST   |   Update On 2018-05-15 11:39:00 IST
சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை நிறுத்தவில்லையென்றால் சென்னையில் முதல்- அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறையில்லாத அரசாக செயல்பட்டு வருகிறது.

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விளைநிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தற்போது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முற்பட்டால் விரைவில் சென்னையில் முதல்வரின் பணியை தடுக்கும் வகையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம். காவிரி மேலாண்மை வாரிய வி‌ஷயத்தில் தமிழக அரசு பாரதிய ஜனதாவுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

தொடர்ந்து காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என அனைவரும் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோம் என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படுவதாக கூறப்படும் எட்டு வழி சாலைக்கு 2 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். இதே போன்று தமிழகத்தில் கெயில் குழாய் பதிப்பது, உயர் மின் கோபுரம் அமைப்பதை விவசாய விளை நிலங்களில் அமைக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News