செய்திகள்
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ராஜமூர்த்தி சிகிச்சை பெற்ற போது எடுத்த படம்.

மு.க.ஸ்டாலின் மைத்துனருக்கு மாரடைப்பு- ஆளுங்கட்சியினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2018-05-01 11:16 IST   |   Update On 2018-05-01 11:16:00 IST
தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மைத்துனருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர் ஆன அவரை பணிமாற்றம் செய்ததால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் திருவெண்காட்டை சேர்ந்தவர் டாக்டர் ராஜமூர்த்தி (வயது 55). இவர் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார். இவர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 28 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார். 9 ஆண்டுகளாக செம்பனார்கோவில் வட்டார மருத்துவ அலுவலராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சங்கத்திலும் பொறுப்பு வகித்து வருகிறார்.

தற்போது ராஜமூர்த்தி ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், அருட்செல்வம் மற்றும் கட்சியினர் ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜமூர்த்தியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

பின்னர் ராஜமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றேன். அப்போது நாகை மாவட்ட சுகாதார பிரிவு துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து என்னை போனில் தொடர்பு கொண்டு உங்களை நாகைக்கு இடமாற்றம் செய்துள்ளோம். எனவே ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான், நான் எங்கே செல்வது, எனது இடத்திற்கு யார் வந்து பொறுப்பு ஏற்று கொள்ளபோகிறார் என்று கேட்டேன் அதற்கு துணை இயக்குனர் பார்த்துகொள்வார் என கூறினர். இந்த சம்பவத்தால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த அக்டோபர் மாதம் ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலை புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆளுங்கட்சியினர் தளவாட பொருட்கள் ஏன் கொண்டு வரவில்லை என்று பிரச்சனை செய்து என்னை பணி மாற்றம் செய்தனர். இதற்கு கோர்ட்டை அணுகி இடைகால தடை பெற்றேன் இருந்தபோதிலும் ஆளுங்கட்சியினர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். தற்போது இடமாற்றம் செய்து நாகை செல்லும் படி வற்புறுத்துகின்றனர். என்னை விருப்ப ஓய்வு பெற சொன்னால் அதை ஏற்று இருப்பேன். என் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு ஆளுங்கட்சியினர் தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ராஜமூர்த்தி மேல் சிகிச்சைக்காக சென்னை உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News