செய்திகள்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Published On 2018-04-30 09:23 IST   |   Update On 2018-04-30 09:23:00 IST
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #petrolbomb #rss
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 37). மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளரான இவர், வீட்டிலேயே முட வைத்திய சாலை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரன் தனது நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்று விட்டார். நேற்று இரவு வீட்டில் அவர் மனைவி தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து கதவு சேதமடைந்தது. மேலும் அங்கு இருந்த துணிகளும் எரிந்தது. சத்தம் கேட்டு எழுந்த பாஸ்கரனின் மனைவி வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாஸ்கரனின் சகோதரர் பிரபாகரன் குன்றக்குடி போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#petrolbomb #rss

Similar News