செய்திகள்

சிவகங்கையில் தலை துண்டித்து வியாபாரி கொலை

Published On 2018-04-29 16:22 IST   |   Update On 2018-04-29 16:22:00 IST
சிவகங்கையில் பட்டப்பகலில் தலை துண்டித்து வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது35), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக இளையான்குடி அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பூமிநாதன் (37) என்பவருடன் சேர்ந்து நுங்கு வியாபாரத்தில் ஈடுபட்டார்.

சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு முத்துப்பாண்டி நின்றபோது, பூமிநாதன் வந்தார். அவர் ஏதோ கேட்க 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாற ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

பூமிநாதன் தனது இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து முத்துப்பாண்டியை வெட்டினார். அப்படியும் ஆத்திரம் அடங்காத அவர், முத்துப்பாண்டி தலையை தனியாக துண்டித்து ரத்தம் சொட்ட... சொட்ட... எடுத்து சென்றார்.

சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதும் அங்கு முத்துப் பாண்டி தலையையும், அரிவாள் மற்றும் தான் வைத்திருந்த கூடையையும் சாலையில் வைத்து விட்டு நடந்தார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை பதட்டத்தை ஏற்படுத்தியது. அந்த வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பூமிநாதனை கைது செய்தனர்.

முத்துப்பாண்டி தலை மற்றும் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வியாபார பணம் தொடர்பான முன் விரோதத்தில் கொலை நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு உமா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

கொலை நடந்த இடம் முன்பு டாஸ்மாக் கடை உள்து. இந்த கடையை அகற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கடையால் தினமும் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இனியாவது டாஸ்மாக் கடை அகற்றப்படும? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Similar News