செய்திகள்

நிர்மலாதேவி விவகாரம்: பேஸ்புக்கில் அவதூறு கருத்தை வெளியிட்ட வாலிபர் கைது

Published On 2018-04-27 18:53 IST   |   Update On 2018-04-27 18:53:00 IST
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அமைச்சர்களை தொடர்புபடுத்தி பேஸ்புக்கில் அவதூறு கருத்தை வெளியிட்ட பண்ருட்டி வாலிபர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25) டிப்ளமோ படித்துள்ளார். இவர் அருப்புகோட்டை தேவாங்கர் கலைகல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் சிலரை தொடர்புபடுத்தி அவதூறான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இது குறித்து சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சந்தோஷின் பேஸ்புக் பதிவை பார்த்ததில் அவர் தொடர்ந்து இதுபோன்ற அவதூறான கருத்தை வெளியிட்டு வந்ததை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பீர்பாட்ஷா தலைமையில் போலீசார் பண்ருட்டி அடுத்த கீழ்இருப்பு கிராமத்துக்கு வந்தனர். அங்குள்ள சந்தோசின் வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த சந்தோசை கைது செய்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் சந்தோஷ் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட சந்தோசை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

எதற்காக பேஸ்புக்கில் அவதூறான கருத்தை வெளியிட்டார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று பல்வேறு கோணங்களில் சந்தோசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் சுற்றி வளைத்து வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News