செய்திகள்

தேவனாம்பட்டினம் கடற்கரையில் 30 அடி தூரம் கடல் உள்வாங்கியது- பொதுமக்கள் அச்சம்

Published On 2018-04-25 17:24 GMT   |   Update On 2018-04-25 17:24 GMT
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர்:

தென்தமிழக கடல் பகுதியில் கடல்சீற்றம்- ராட்சத அலைகள் எழும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி குமரி முதல் தென்தமிழக கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக கடல்சீற்றம் காணப்பட்டது.

10 அடி முதல் 15 அடி உயரம் வரை ராட்சத அலைகளும் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. அதுபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், ராசாப் பேட்டை போன்ற கடற்கரை பகுதிகளிலும் கடந்த 21-ந் தேதி அன்று கடல் சீற்றம் அதிகம் காணப்பட்டது. அலைகளும் எழுந்தன.

கடல்சீற்றம் காரணமாக ஆழ்கடல் பகுதியில் வசித்து வந்த டால்பின் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. ராசாப்பேட்டை, தாழங்குடா பகுதிகளில் டால்பின் மீன்கள் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

கடந்த 22-ந் தேதி அன்று சுமார் 5 அடி முதல் 10 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியது. கடல் பகுதியில் தொடர்ந்து உள்வாங்கி வருவதால் கடற்கரையோரம் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட அதிகஅளவு கடல் உள்வாங்கி இருந்தது.

சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் கடல் உள்வாங்கியிருப்பதை பார்த்து அச்சமடைந்தனர். அவர்கள் வெகு தூரத்தில் நின்று கடல் அலைகளை பார்த்தனர்.

Tags:    

Similar News