செய்திகள்
கர்நாடக அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

கடலூரில் கர்நாடக அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

Published On 2018-04-11 10:49 IST   |   Update On 2018-04-11 10:49:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் கர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7-30 மணிக்கு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று பெங்களூருவுக்கு புறப்பட்டது.

இந்த பஸ்சை டிரைவர் பசவராஜ்(வயது 30) ஓட்டினார். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கடலூர் ஏ.எல்.சி. சர்ச் அருகே வந்தபோது நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் தலைமையில் அக்கட்சியினர் பஸ்சை வழிமறித்து சிறைபிடித்தனர்.

அப்போது கட்சி தொண்டர் ஒருவர் திடீரென்று பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கம்பால் அடித்தார். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் அச்சம் அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து கீழே இறங்கிஓடினார்கள்.

தகவல் அறிந்த புது நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நாம் தமிழர் கட்சியினரிடம் இருந்து பஸ்சை மீட்டனர்.

கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், மாவட்ட தலைவர் சாமிரவி, நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ராஜா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News