செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நெய்வேலி அனல்மின் நிலையம் முற்றுகை

Published On 2018-04-10 14:56 IST   |   Update On 2018-04-10 14:56:00 IST
கர்நாடகத்துக்கு நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.
நெய்வேலி:

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கடந்த 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு சென்று சுங்கச்சாவடியை தடியால் அடித்து உடைத்து சூறையாடினார்கள். மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி தண்ணீர்தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல்மின் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணி அளவில் என்.எல்.சி. ஆஸ்பத்திரி அருகில் வேல்முருகன் தலைமையில் தொண்டர்கள் மற்றும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர்.

அங்கிருந்து அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

இந்த பேரணி செவ்வாய்சந்தை, புதுக்குப்பம் ரவுண்டானா, நெய்வேலி அனல்மின் நிலையம் முன்பு உள்ள ஸ்க்யூ பாலத்தை சென்றடைந்தது.

அங்கு வேல் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தையொட்டி ஐ.ஜி. ஸ்ரீதர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டு, 500 போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் 200 பேர் உள்பட 1,500 போலீசார் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News