செய்திகள்

பண்ருட்டியில் செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

Published On 2018-03-11 17:30 IST   |   Update On 2018-03-11 17:30:00 IST
பண்ருட்டியில் இன்று காலை செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பாப்பகுடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35) விவசாயி. இவர் இன்று காலை 7 மணிக்கு பாப்பக்குடியில் இருந்து பண்ருட்டிக்கு வந்தார்.

பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் இருக்கும் 150 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவரை நோக்கி சென்றார். அவரது கையில் மண்எண்ணை பாட்டில் வைத்திருந்தார். திடீரென செல்போன் டவர் மீது ஏறினார்.

செல்போன் டவரில் 75 அடி உயரத்துக்கு சென்ற அவர் அங்கு நின்று கொண்டு நான் சாகப் போகிறேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் ஒலிப்பெருக்கி மூலம் குமாரை கீழே இறங்கி வரும்படி வற்புறுத்தினர். உங்களது பிரச்சினைகள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று சமாதானம் கூறி அழைத்தனர்.

ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. செல்போன் டவரில் நின்று கொண்டு தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்த வண்ணமே இருந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். ஏராளமான பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். #tamilnews

Similar News