செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம்

Published On 2018-03-06 10:08 IST   |   Update On 2018-03-06 10:08:00 IST
நடிகர் கமல்ஹாசன் வரும் 10 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஈரோடு:

நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் களத்தில் குதித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வரும் 10 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 10-ந்தேதி கமல்ஹாசன் பிற்பகல் 11 மணியளவில் ஈரோடு வருகிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். வரவேற்பை பெற்றுக் கொள்ளும் கமல்ஹாசன் ஈரோடு பரிமளம் மகாலுக்கு செல்கிறார்.

அங்கு நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். கமல் விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.

மாலை 4 மணியளவில் தனியார் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளிலிருந்து கமல்ஹாசன் கட்சியில் இணையும் விழா நடக்கிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மறுநாள் வரும் 11-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனது கட்சி கொடிகளை ஏற்றி பேசுகிறார்.

11-ந்தேதி தனது முதல் நிகழ்ச்சியாக கமல்ஹாசன் ஈரோட்டில் உள்ள பெரியார் இல்லத்துக்கு சென்று பார்வையிடுகிறார்.

தொடர்ந்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தனது கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசுகிறார். அதன் பிறகு சித்தோடு, பவானி, அந்தியூர், அத்தாணி, டி.என்.பாளையம், சத்தியமங்கலம் மற்றும் கோபியில் கட்சி கொடிகள் ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.

அன்று இரவு கோபியில் தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் தங்குகிறார். #tamilnews

Similar News