காவிரிநீர் மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் பேட்டி
கடலூர்:
கடலூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்வு வழங்கி உள்ளது. 4 மாநிலம் சம்பந்தப்பட்டுள்ள இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது போல் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பிரதிநிதிகள் தன்னை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்காமல் பிரதமர் காலம்தாழ்த்தி வருகிறார். இதற்கான காரணத்தை தமிழக அரசு கேட்டு அறிவிக்கவேண்டும். அதேப்போன்று தமிழகத்திற்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட வில்லையெனில் என்ன நடவடிக்கை எடுப்பதை என்பதையும் தமிழக அரசே அறிவிக்க வேண்டும்.
அதற்கு முன்பாக வேறு கட்சிகள் போராட்டம் அறிவிப்பை வெளியிட்டால் அது தமிழக விவசாயிகளுக்கே பாதகமாகமுடியும். இதனால் ஏதேனும் போராட்ட அறிவிப்பு என்றால் அதனை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தே அறிவிக்க வேண்டும். மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரஸ் கட்சியும் இப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.
இந்தியாவில் சட்டத்திற்கு உட்பட்ட கூட்டாட்சி நடைபெறுகிறது உண்மை யென்றால் காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கார்த்தி சிதம்பரம் கைது நடவடிக்கை என்பது 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறையின் சோதனையில் அடிப்படையிலானது.
உண்மை நிலை என்ன என்பதை விசாரணை அமைப்புகள் விரைந்து விசாரித்து தெரிவிக்க வேண்டும். வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடு தப்புபவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதை வரவேற்கிறோம்.
ரஜினி, கமலோடு கூட்டணியா என்பதை இப்போது சொல்லமுடியாது. தற்போது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் நேரத்தில் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கட்சியின் மாநில துணைதலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், மாவட்டத் தலைவர்கள் ஞானச்சந்திரன், நெடுஞ் செழியன், நகர தலைவர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். #tamilnews #gkvasan