செய்திகள்

காஞ்சீபுரத்தில் ஆய்வுக்கு சென்ற கவர்னர் கார் மீது கருப்பு கொடி வீச்சு

Published On 2018-02-27 15:55 IST   |   Update On 2018-02-27 15:55:00 IST
படப்பையில் ஆய்வுக்கு வந்த கவர்னர் கார் மீது தி.மு.க.வினர் சிலர் கருப்பு கொடிகளை வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து கவர்னருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போது போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய கவர்னர் பன்வாரிலால் இன்று காலை காரில் புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர்.

கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி போராட்டம் நடத்த குவிந்தனர்.

தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த்ரமேஷ் மற்றும் படப்பை மனோகரன், வைத்திலிங்கம், தமிழ்மணி, மாமல்லபுரம் விசுவநாதன், வெ.கருணாநிதி, பல்லாவரம் ஜோசப் ரமேஷ், ரஞ்சன், செம்பாக்கம் கற்பகம் சுரேஷ், லட்சுமிபதி ராஜா, ஜோதி குமார், பெருங்களத்தூர் புகழேந்தி, உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் இருந்து வந்து கருப்பு கொடியுடன் திரண்டு இருந்தனர்.

படப்பையில் கவர்னர் கார் வந்தபோது கோ‌ஷம் எழுப்பினார்கள். திடீரென்று கூட்டத்தில் இருந்த சிலர் கவர்னர் கார் மீது கருப்பு கொடிகளை வீசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் ரோட்டில் கிடந்த கருப்பு கொடிகளை அகற்றினார்கள்.

காஞ்சீபுரம் சென்ற கவர்னர் பன்வாரிலால் வாலாஜாபாத் அடுத்த ஏக்கனாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுகாதார கட்டிடம் மற்றும் கழிப்பறைகளை திறந்து வைத்தார்.

பின்னர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாலை 4 மணிக்கு சங்கரமடம் செல்கிறார். அங்கு சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், விஜயேந்திர சரசுவதி சுவாமிகள் ஆகியோரை சந்திக்கிறார்.

மாலை 5 மணிக்கு காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிறகு சென்னை புறப்பட்டு செல்கிறார். முன்னதாக காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக் கொடி காட்ட ஏராளமானோர் கூடியிருந்தனர். #tamilnews

Similar News