செய்திகள்
மின்கம்பியில் தொங்கியபடி ஐரிங்.

ஈரோட்டில் 2 மணி நேரம் மின்கம்பியில் தொங்கியபடி பொதுமக்களை பதற வைத்த எலக்ட்ரீசியன்

Published On 2018-02-24 10:38 IST   |   Update On 2018-02-24 10:38:00 IST
ஈரோட்டில் நள்ளிரவில் 2 மணி நேரம் மின்கம்பியில் அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி எலக்ட்ரீசியன் பொதுமக்கள் பதற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (வயது50). எலக்ட்ரீசியன். இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சைனி(9), லைலோனி(12) என 2 மகள்கள் உள்ளனர்.

ஐரிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து கோவையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ஐரிங் தனது 2 மகள்களுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது மகள்கள் தாயை பார்க்க வேண்டும் என்று ஐரிங்கிடம் கூறி அழுது உள்ளனர். இதையடுத்து அவர் பெங்களூருவில் இருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

அந்த பஸ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வந்த போது ஐரிங்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நள்ளிரவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஐரிங் அனுமதிக்கப்பட்டார்.

நள்ளிரவு 11 மணிக்கு சிகிச்சையில் இருந்த ஐரிங் திடீரென வெளியே ஓடி வந்தார். அவரது பின்னால் அவரது இரண்டு மகள்களும் அழுது கொண்டே ஓடி வந்தனர். திடீரென ஐரிங் அந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் வேகமாக ஏறினார்.

இதை பார்த்த பொது மக்கள் ஏதோ விபரீதம் ஏற்பட போகிறது என்று கருதி உடனடியாக மின் ஊழியர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மின்ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. இரவு நேர சினிமா காட்சியை முடித்து கொண்டு வந்தவர்கள் இந்த காட்சியை அதிர்ச்சியுடன் உறைந்து நின்றனர்.

ஐரிங்
டவுன் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இன்ஸ்பெக்டர் விஜயன் ஐரிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் எதுக்கும் மசியவில்லை.

ஐரிங் மின்கம்பி அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி போலீசுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தார். இவ்வாறாக அவர் சுமார் 2 மணி நேரம் போலீசுக்கும், பொது மக்களுக்கும் போக்கு காட்டி வந்தார்.

ஒரு வழியாக அதிகாலை 1 மணி அளவில் ஐரிங்கை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட னர். பின்னர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ஐரிங்கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு ஈரோடுக்கு வந்தனர்.

அவர்களிடம் ஐரிங் மற்றும் அவரது 2 மகள்களும் ஒப்படைக்கப்பட்டனர். ஐரிங்கை உறவினர்கள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews

Similar News