செய்திகள்

சிவகங்கையில் பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி - 4 வக்கீல்களிடம் போலீசார் விசாரணை

Published On 2018-02-23 11:43 IST   |   Update On 2018-02-23 11:43:00 IST
வக்கீல்கள் தாக்கியதால் தற்கொலைக்கு முயன்ற அரசு பஸ் டிரைவர் தொடர்பான வழக்கில் வக்கீல்கள் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை:

சிவகங்கை- திருப்பத்தூர் ரோட்டில் இருந்து கோர்ட்டுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருப்பதையும் அதனை சரி செய்ய வலியுறுத்தியும் சிவகங்கை வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று சிவகங்கை பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

அப்போது பரமக்குடி செல்லும் அரசு பஸ், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. பஸ்சை நிறுத்த முயன்ற வக்கீல் சங்க செயலாளர் தங்கப்பாண்டியன் தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான வக்கீல்கள் திரண்டு பஸ்சை மறித்தனர். டிரைவர் செல்வராஜூக்கும், வக்கீல்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வக்கீல்கள், டிரைவர் செல்வராஜை சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியலும் கைவிடப்பட்டது.

வக்கீல்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் செல்வராஜ், நேற்று மாலை பணி முடிந்து தனது சொந்த ஊரான பரமக்குடி அருகே உள்ள பெருங்குளத்தூர் சென்றார். மன வேதனையில் இருந்த அவர், வி‌ஷம் குடித்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மயங்கிக் கிடந்தார்.

உடனடியாக அவரை பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்கொலை முயற்சி காரணம் குறித்து செல்வராஜ் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். வக்கீல்களால் தாக்கப்பட்ட போது, என்னை காப்பாற்ற போலீசார் வராமல் வேடிக்கை பார்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் வி‌ஷம் குடித்து விட்ட தாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல்கள் தங்கப்பாண்டியன், மதி, செந்தில், வால்மிகிநாதன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News