செய்திகள்

பண்ருட்டி அருகே வகுப்பறையை பூட்டி ஆசிரியை சிறைவைப்பு

Published On 2018-02-21 11:07 GMT   |   Update On 2018-02-21 11:07 GMT
பண்ருட்டி அருகே கூடுதல் ஆசிரியர் நியமிக்கக்கோரி வகுப்பறையை பூட்டி ஆசிரியை பொதுமக்கள் சிறைவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேலங்குப் பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்புவரை உள்ளன.

இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆசிரியைகள் லட்சுமி, ஐசென்ட் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி என்பவர் பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காமல் மாதந்தோறும் சம்பளத்தை மட்டும் பெற்றுவந்தார்.

இதற்கிடையே ஆசிரியை ஐசென்ட் மட்டும் 1 முதல் 5-ம் வகுப்புவரை பாடம் நடத்தி வந்தார். ஆசிரியை பற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வந்தனர்.

ஆசிரியை லட்சுமி பள்ளிக்கு வராமல் மாதந்தோறும் சம்பளம் பெற்றுசெல்லும் சம்பவம் வேலங்குப்பம் கிராம மக்களுக்கு தெரியவந்தது. பள்ளியில் ஆசிரியை இல்லாததால் தங்கள் குழந்தைகள் பள்ளியில் கல்வி பயிலமுடியாமல் இருப்பதை அறிந்து வேதனை அடைந்தனர்.

இன்று காலை ஆசிரியை ஐசென்ட் மட்டும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். பின்பு அவர் மாணவர்களுக்கு வகுப்பறையில் அமர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டுவந்தனர். பின்னர் அவர்கள் வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகளை வெளியே அழைத்தனர்.

அதன்பின்பு அவர்கள் ஆசிரியை ஐசென்டை அறையில் வைத்து பூட்டி சிறைவைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திலகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆசிரியை அறையில் வைத்து பூட்டி சிறைவைத்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, தொடக்கப்பள்ளியில் ஒரு ஆசிரியை மட்டும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். மற்றொரு ஆசிரியை சம்பளம் வாங்கி கொண்டு பள்ளிக்கு வராமல் உள்ளார். இதனால் மாணவ-மாணவி களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியை நியமிக்கவேண்டும். மேலும் பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆசிரியையை சஸ்பெண்டு செய்யவேண்டும் என்றனர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியையை அறையில் வைத்து பொதுமக்கள் பூட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Tags:    

Similar News