செய்திகள்
முதலை கடித்து பலியான முனுசாமி.

கொள்ளிடம் ஆற்றில் குளித்த கூலித்தொழிலாளி முதலை கடித்து மரணம்

Published On 2018-02-21 06:20 GMT   |   Update On 2018-02-21 06:20 GMT
குமாராட்சி அருகே உள்ள நந்திமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் கூலித் தொழிலாளி ஒருவர் முதலை கடித்து இறந்த சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள நந்தி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(வயது50). கூலித்தொழிலாளி

இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக 2 முதலைகள் திடீரென முனுசாமியை கடித்து ஆற்றுக்குள் இழுத்து சென்றன. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் முதலைகள் முனுசாமியின் முதுகு பகுதி, கால், தொடை, என அனைத்து பகுதிகளையும் கடித்து குதறின.

இதில் முனுசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற முனுசாமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் முனுசாமியை தேடி ஆற்று பகுதிக்கு சென்றனர்.

அப்போது ஆற்றங்கரையோரத்தில் முனுசாமி ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது உடலைப்பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து குமராட்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் முதலைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் முதலை கடித்து காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கூலித் தொழிலாளி ஒருவர் முதலை கடித்து இறந்த சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குமாராட்சி அருகே உள்ள நந்திமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் குளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News