செய்திகள்
விபத்தில் பலியான கணபதிபாண்டியன்-சபிதா.

விருத்தாசலம் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் என்.எல்.சி. அதிகாரி - மனைவி பலி

Published On 2018-02-20 10:30 GMT   |   Update On 2018-02-20 10:30 GMT
விருத்தாசலம் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் என்.எல்.சி. அதிகாரி, மனைவி பலியாகினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கணபதிபாண்டியன் (வயது 48). இவரது மனைவி சபிதா (44). இவர்களுக்கு சுவேதா வர்ஷினி (23) என்ற மகள் உள்ளார். இவர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

கணபதிபாண்டியன் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 1-ல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை கணபதி பாண்டியனும், அவரது மனைவி சபிதாவும் ஒரு காரில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.

அங்கு திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் அவர்கள் காரில் ஊருக்கு திரும்பினர். காரை கணபதி பாண்டியன் ஓட்டி வந்தார். அவர்கள் வந்த கார் நள்ளிரவு 1 மணிக்கு விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் வந்தது.

அப்போது விருத்தாசலத்தில் இருந்து ஒரு லாரி நெல் மூட்டைளை ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரும்-லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த கணபதி பாண்டியன், அவரது மனைவி சபிதா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

பின்னர் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.  #tamilnews

Tags:    

Similar News